போரதீவுப்பற்றில் சர்வதேச மகளிர் தின விழா - 2025
போரதீவுப்பற்று பிரதேச செயலகமும் சமுர்த்தி திணைக்களமும் இணைந்து நடாத்தும் சர்வதேச மகளிர் தின விழா சுரவணையடியூற்று கிராம மட்ட அமைப்புக்களின் அனுசரனையில் "நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் அவள் ஓர் வழிகாட்டி" எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின விழா பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் அவர்களின் தலைமையில் போரதீவுப்பற்று கலாசார மத்திய நிலையத்தில் 2025.03.11 ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது விவாதப்போட்டி, வில்லுப்பாட்டு, வீதி நாடகம், நடனம் எனப் பல கலை நிகழ்வுகளும் இடம் பெற்றதுடன் மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்த வலைப்பந்தாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற போரதீவுப்பற்று பிரதேச செயலக வலைப்பந்தாட்ட பெண்கள் அணியினருக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், போரதீவுப்பற்று பிரதேச செயலகம், வெல்லாவெளி கோட்டக் கல்வி அலுவலகம் மற்றும் வெல்லாவெளி மருத்துவமாது அலுவலகம் போன்றவற்றிற்கு தனது காணியினை அன்பளிப்பாக வழங்கிய திருமதி. சந்தணப்பிள்ளை குமரப்போடி (பரமேஸ்வரி) அம்மணி அவர்கள் "வாழும்போதே வாழ்த்துவோம்" எனும் தொனிப்பொருளில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சட்டத்தரணி திருமதி. கிரிஜாலினி ரஞ்யித்குமார் அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன். போரதீவுப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் வி.துலாஞ்சனன், கணக்காளர் தி.அம்பிகாபதி, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவ மாணவிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.














